4 வது முறையாக சிவா- அஜித் கூட்டணி: விண்வெளியில் படமாகிறது?

அஜித் குமாருடன் 4-வது முறையாக கூட்டணி சேரும் இயக்குநர் சிறுத்தை சிவா தனது அடுத்த படத்திற்கு விண்வெளி தொடர்பான கதையை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீரம் படத்தின் மூலம் இயக்குநர் சிவா அஜித்துடன் முதன்முறையாக கூட்டணி அமைத்தார். 2014 ஆம் ஆண்டு பொங்கல் விழாவையொட்டி வெளியான இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. மீண்டும் இதே கூட்டணி வேதாளம் படத்தில் கைகோர்த்தது. அண்ணன், தங்கை சென்டிமெண்ட் கதையால் வேதாளம் மக்களை ஈர்த்தது.

இரண்டு வெற்றிகளை தொடர்ந்து இந்த கூட்டணியில் மூன்றாவதாக வந்த விவேகம் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும், விமர்சனங்களை தாண்டி விவேகம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து, அஜித்குமாரின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவா இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விண்வெளி (ஸ்பேஸ்) சம்பந்தமான பின்னணியில் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் போன்ற ஒரு மாஸ் நடிகர் ஸ்பேஸ் தொடர்பான படத்தில் நடித்தால் அது மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஜெயம் ரவி விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட டிக்டிக்டிக் நடித்து வருகிறார்.