நுரையீரல் கிருமி நீங்க!

ஆசிரியர் - Editor
நுரையீரல் கிருமி நீங்க!

"சதாபத்யம்' அதாவது தொடர்ந்து உண்பதற்கேற்றவை என்று சில உணவுப் பொருட்களை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. சிவந்த காரரசி, கோதுமை, யவை எனும் வாற்கோதுமை, அறுபதாங்குறுவை அரிசி, ஆரைக்கீரை, கீரிப்பாலை, இளம் முள்ளங்கி, வாஸ்துக் கீரை, கடுக்காய், நெல்லிக்காய், திராட்சை, புடலங்காய், பச்சைப் பயறு, சர்க்கரை, நெய், மழைத்தண்ணீர், பால், தேன், மாதுளை, இந்துப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து உண்ணலாம். உங்களுக்கு சர்க்கரை உபாதை இருப்பதால், இவற்றில் திராட்சை, சர்க்கரை, நெய், தேன் ஆகியவற்றை முடிந்தவரை குறைக்கவும். மற்றவற்றைச் சாப்பிடலாம்.

அடிக்கடி தொண்டையில் கபம் சேர்வதாகவும், காசநோய் மற்றும் நுரையீரல் கிருமிகள் உள்ளதாகவும் கூறியுள்ளீர்கள். காரம், கசப்பு, துவர்ப்பு ஆகியவை கொண்ட உணவு, கொள்ளு, துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப் பயறு ஆகியவை வகைக்கு ஒரு பிடி, சுக்கு மிளகு, திப்பிலி வகைக்கு 2 கிராம் வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சி வடிகட்டி சிட்டிகை, இந்துப்புடன் காலை உணவாகச் சாப்பிடுவது நலம். கோரைக் கிழங்கும், சுக்கும் வகைக்கு 8 கிராம் வீதம் 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டரானதும் வடி கட்டி, காலையில் குடித்த கஞ்சிக்குப் பிறகு சிறிதும், மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் பிறகு சிறிதாகவும், பிரித்துக் குடித்தால், நீங்கள் குறிப்பிடும் உபாதை குறைவதுடன், சர்க்கரையின் அளவும் கூடாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் குறையும்.

3-4 சொட்டுகள் குங்குமாதி தைலம் அல்லது அணு தைலத்தையோ காலை, இரவு உணவுக்குப் பிறகு மூக்கினுள் விட்டு உறிஞ்சித் துப்பிவிடுவதால், தொண்டையில் சேரும் கபம் குறைய உதவும். கபத்தினுடைய அதிக அளவின் சேர்க்கையை இந்த சிகிச்சை முறை வெளிப்படுத்துவதால், மூச்சுக் குழாய் நுரையீரல் பகுதி சுத்தமடைந்து பிராண வாயு எளிதாக உள்ளே செல்லும். மூச்சுத் திணறல் உபாதையைக் குறைக்கவும் உதவும்.

தலைக்குச் சந்தனாதி, க்ஷீரபலா, திரிபலாதி போன்ற தைலங்களில் ஒன்றைத் தேய்த்துக் குளித்து வந்தால், இரத்த அழுத்த உபாதையைக் குறைக்க ஏதுவாக இருக்கும். மஹாமாஷம், பலா அஸ்வகந்தாதி தைலங்கள் உடலுக்குத் தேய்த்துக் குளிக்க ஏற்றவை. உடல் இளைத்துப் போவதைத் தடுக்கும். வைஷ்வாரைம், ஹிங்குவசாதி, அஷ்டசூரணம் போன்ற மருந்துகளில் ஒன்றை வெந்நீருடன் சாப்பிட, மலச்சிக்கல் உபாதை தீர்வதுடன், குடலும் சுத்தமாக இருக்கும். பசியும் மந்தமாகாமல் நல்ல நிலையில் இருக்கும்.
தயிர், மிகவும் மெலிந்து உலர்ந்துபோன பன்றி, செம்மறியாடு, மீன், பசு, எறுமை ஆகியவற்றின் மாமிசம், உளுந்து, மொச்சை, சிறுகடலை, மாவுப் பண்டம், முளைகட்டிய தானியம் போன்றவற்றைத் தவிர்க்கவும். இவை உங்களுக்குள்ள உபாதைகளனைத்தையும் அதிகரிக்கக் கூடியவை.

வியாக்ரயாதி கஷாயமும் இந்து காந்தம் எனும் கஷாயமும் வில்வாதி குளிகை எனும் மாத்திரையுடன் அரைத்துச் சாப்பிட்டால் நுரையீரல் கிருமி, தொண்டையில் ஏற்படும் சளி, காச நோய் உபாதைகளுக்கு மிகவும் நல்ல மருந்தாகும். மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன் பிறகு சாப்பிடுவது உத்தமம். பல மருந்துகளின் தேவை உங்களுக்கு இருப்பதால் அவை சாப்பிட வேண்டிய நேரம், முறை, அளவு போன்றவை கவனித்துத் தரப்பட வேண்டியவையாகும். இருந்தாலும் 13 மாத்திரை அளவுக்குச் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தமிருக்காது