கல்லீரல் நோய்..!

ஆசிரியர் - Editor

மனிதனுடைய உடல் அமைப்புகளில் அற்புதமான செயலை செய்வது ஈரல். சுரப்பிகளிலேயே மிகவும் நுணுக்கமானது மற்றும் அளவிலும் பெரியது. இந்த ஈரலானது இதயம், சிறுநீரகம், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் உணவுகளைச் செரிக்கச் செய்வது போன்ற எண்ணற்ற வேலைகளை இடையறாது செய்து கொண்டே இருக்கிறது. இந்த செயல் திறனைக் குறைக்கும்படி பலவித நோய்களாலும், கிருமித் தொற்றுகளினாலும் ஈரல் வீக்கம் அல்லது ஈரல் சுருங்கிப் போதல், காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் உண்டாகின்றது.


உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இப்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அறிகுறிகள் என்னவாக இருக்கும் என்பதைப் சற்று கவனிப்போம்.

⭕️ வாய் துர்நாற்றம்:

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

அறிகுறிகள்:

வாயில் கசப்புச் சுவை, ருசியின்மை, வாயில் நீர் ஊறல், பசியில்லாமை, உண்ட உணவு செரியாமை, காலையில் பித்தவாந்தி, முகத்தில் தேஜஸ் குறைதல், முகம் வற்றி, எலும்புகள் தெரிதல், வயிறு பெருத்து கை கால் மெலிந்து போதல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

⭕️ வாய்வு கல்லீரல் நோய்:

ஏப்பம் அல்லது காற்றுப் பிரிதல் அதிகமாக இருக்கும். காய்ச்சல் உண்டாகி உடம்பு இளைத்துக் கொண்டே போகும். வயிறு பெரியதாகக் காணப்படும். உடம்பில் கட்டிகள் தோன்றும்.

⭕️ பித்தக் கல்லீரல் நோய்:

ரத்தத்தை கெடுத்துவிடும். பித்தத்தின் தன்மை அதிகரிக்கச் செய்து உடல் முழுவதும் மஞ்சளாகத் தோற்றம் அளிக்கும். வாயில் கசப்பு ஏற்பட்டு பித்த வாந்தி எடுத்தல், முகம் வெளிறிக் காணப்படும்.

⭕️ கபத்தினால் உண்டாகும் ஈரல் நோய்:

சளியுடன் கூடிய இருமல் அதிகமாக இருப்பதால் கல்லீரல் கெட்டு விடுகிறது. உடல் வீங்கி வெளுத்து வயிற்றைப் பெருக்கச் செய்யும். 

✔️ மருந்து 1: திரிபலா கஷாயம்

தேவையான பொருள்கள்

கடுக்காய்த் தோல் = 100 கிராம்.
நெல்லி வற்றல் = 100 கிராம்.
தான்றிக்காய் தோல் = 100 கிராம்.

செய்முறை:

எல்லாவற்றையும் சுத்தப் படுத்தி, வெயிலில் காய வைத்து, இடித்து நுண்ணிய சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 200 மி.லி நீரில் கலந்து அசையாமல் இரவு முழுக்க வைத்திருந்து மருந்துகளை வடிக்கட்டிச் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கவும். காலையிலும் இதே போல் ஊறவைத்து மாலையில் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:

காமாலை, ஈரல் வீக்கம் போன்ற நோய்கள் குறையும்.

✔️ மருந்து 2: அன்னாசி பழச்சாறு
அன்னாசிப் பழத்தில் இருந்து பிழிந்த சாறை ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று தடவை 100 மி.லி வீதம் குடித்து வந்தால் ஈரல் நோயின் வீரியம் குறையும்.

✔️ மருந்து 3: முள்ளங்கி சாறு
முள்ளங்கியை இடித்துப் பிழிந்து சாறை வேளைக்கு 25 மி.லி ஆக ஒரு நாளைக்கு 2 வேளை குடிப்பதால் வலப்பாட்டு மற்றும் இடப்பாட்டு ஈரல் வீக்கம், ஈரல் கட்டி முதலியவை குறையும்.

✔️ மருந்து 4: வேப்பம் பட்டை கஷாயம்

செய்முறை:

100 வருடம் சென்ற பழைய வேப்ப மரத்தின் பட்டைகளைக் கொண்டு வந்து மேல் இருக்கும் வறண்ட பகுதியை நீக்கிவிட்டு உட்பகுதியைப் பஞ்சு போல் இடித்து தண்ணீர் சேர்த்து சிறு தீயாக எரித்து நன்கு வற்ற வைத்து மருந்தைக் கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

ஒரு வேளைக்கு 50 மி.லி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

கல்லீரல், மண்ணீரல் வீக்கம் மற்றும் சுரத்தில் வந்த வீக்கம் குறையும்.

✔️ மருந்து 5: கருந்துளசி கஷாயம்
தேவையானப் பொருள்கள்:
கருந்துளசி வேர்=20 கிராம்.
மிளகு கிராம்=10 கிராம்.
சித்தரத்தை=10 கிராம்.
சதகுப்பை - 40 கிராம்.

செய்முறை:

எல்லாவற்றையும் பெரும் தூளாக இடித்து வைத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுச் சிறு தீயாக எரித்து, அடுப்பில் வைத்து, 120 மி.லி ஆகச் சுண்ட வைத்து, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

காலை, மாலை ஆகிய இரண்டு வேளைக் குடிக்கவும்.

தீரும் நோய்கள்:

கல்லீரல், மண்ணீரல் நோய், காய்ச்சல் கட்டி போன்றவை குறையும்.

✔️ மருந்து 6: வேலிப்பருத்தி இலை பஸ்பம்

தேவையான பொருள்கள்:

உப்பு=1/2 கி.கி.
வேலிப்பருத்தி இலை

செய்முறை:

கறி உப்பை பருங்கற்களாக 1/2 கி.கி. எடுத்து, வேலிப்பருத்தி இலைச் சாறு விட்டு, நன்றாக அரைத்து, வில்லை தட்டி, உலர்த்தி அகலிலிட்டு, மேல் மூடி சீலை மண் செய்து, விராட்டியில் புடம் இடவும். மீண்டும் முன் போலவே அதே சாறை விட்டு அரைத்து, இரண்டு புடங்கள் போட்டு எடுத்தால் பஸ்பமாகும்.

உபயோகிக்கும் முறை:

இதில் இரண்டு முதல் நான்கு குன்றிமணி எடை எடுத்து காலை, மாலை தகுந்த அனுபானங்களில் கொடுத்து வரவும்.
✔️ மருந்து 7:அனுபான லேகியம்

செய்முறை:

கல், மண், தூசி நீங்கிய ஓமம் கிராம் எடுத்து அதை இளம் வறுப்பாக வறுத்துக் கொள்ளவும். இதை இடித்து, நுண்ணிய பொடியாகச் சலித்து வைத்துக் கொள்ளவும். பனை வெல்லம் கிராம் எடுத்து, மெழுகு போல் இடித்து, வைத்திருக்கும் ஓமத்தின் தூளையும் இடித்து மெழுகு பதத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

எலந்தப் பழ அளவு லேகியத்தில் இரண்டு முதல் நான்கு குன்றிமணி எடை கறியுப்பு, பஸ்பத்தை வைத்து, காலை மாலை ஆகிய இரண்டு வேளை கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:

கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய், காய்ச்சல், ஈரல் வீக்கம், கட்டி ஆகியவை குறையும்.

✔️ மருந்து 8: புனர்னவாஷ்டக கஷாயம்
தேவையான பொருள்கள்:
மூக்கரட்டை வேர்=100 கிராம்.
கடுக்காய்த் தோல்=100 கிராம்.
வேப்பம் பட்டை=100 கிராம்.
மர மஞ்சள்=100 கிராம்.
கடுகு ரோகிணி=100 கிராம்.
பேய் புடல்=100 கிராம்.
சீந்தில் கொடி=100 கிராம்.
சுக்கு=100 கிராம்.

செய்முறை:

எல்லாவற்றையும் பெருந்தூளாக இடித்து வைத்துக் கொண்டு 60 கிராம் சூரணத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 150 மி.லி ஆக சுண்ட வைத்து, கசக்கிப் பிழிந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

ஒரு வேளைக்கு 50 மி.லி வீதம் மூன்று வேளை குடிக்கவும்.தீரும் நோய்கள்எல்லா வகையான ஈரல் நோய்களும், வீக்கங்களும் குறையும். சிறுநீர் தாராளமாக இறங்கும். சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.