தயா மாஸ்டர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

ஆசிரியர் - Admin
தயா மாஸ்டர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சியின் ஊடகப் பணிப்பாளராக செயற்பட்டு வரும் தயா மாஸ்டர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் ஊடகப் பணிப்பாளர் மீது அலுவலகத்திற்குள் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்பாணத்தில் வசிக்கும் 53 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப்பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் பலத்த பாதுகாப்புடன் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நள்ளிரவு கொழும்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரால் அவர் தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டார்.

தயா மாஸ்டரை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு அவருடைய உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அப்போதைய பாதுகாப்பு ஊடகப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப்பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர், 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வௌியேறி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சில விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதன் தயாநிதிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தயா மாஸ்டர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய வௌிநாடு செல்வதற்கு தயா மாஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!