இந்த ஆட்சியை தொட்டு கூட பார்க்க முடியாது-கர்வமாக எடப்பாடி பழனிசாமி.!

ஆசிரியர் - Admin
இந்த ஆட்சியை தொட்டு கூட பார்க்க முடியாது-கர்வமாக எடப்பாடி பழனிசாமி.!

ஆட்சி, அதிகாரத்துக்கு அடி பணிந்து கொள்கைகளை விட்டுக்கொடுக்கும் கட்சி அதிமுக இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். நேற்றய தினம் திண்டுக்கல் அங்குவிலாஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர்.ரின் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் விழாவிற்கு தலைமை தாங்கினார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவால் அதிமுக வலுப்பெற்றுவிடும் எனும் எண்ணம் கொண்டவர்கள் நிகழ்வைக் கலைக்க நினைப்பதாகவும், செல்வி ஜே. ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் என தம்மை இனம்காட்டிக் கொள்பவர்கள் அம்மாவின் புகழுக்கே களங்கம் கற்பிக்க முனைவதாகவும் குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி.

மேலும், பாஜகவின் கிளையாக அதிமுக செயல்படுவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து, பச்சோந்தியைப்போல கொள்கைகளை மாற்றி கூட்டணி வைப்பதே திமுக தான் எனவும், பாஜக, காங்கிரஸ் என அடுத்தடுத்து மத்தியில் கூட்டணி வைத்து அவர்கள் தான் கிளைக்கட்சி போல செயல்பட்டார்கள் எனவும், கொள்கைப் பிடிப்புள்ள கட்சி அதிமுக தான். ஆட்சி அதிகாரத்துக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் கட்சி அல்ல. நாங்கள் தன்னிச்சையாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளோம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரையும் சட்டத்துக்கு உட்பட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பழநியில் இரண்டாவது கம்பி வட ஊர்தி பணி உள்ளிட்ட 105 பணிகளுக்கு இந்த விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, முதல்வர் எம்.ஜி.ஆர். புனிதராக வாழ்ந்தவர். வாக்கு வங்கியை திருப்பி விட்டவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். கரன்சி நோட்டுகளால் கழுதையை குதிரை என்றும், பூனையை புலி என்றும் சொல்ல வைத்திருக்கிறார்கள். துரோகிகளால் சத்தியம் சந்திக்கின்ற சோதனைகள் நிரந்தரமானவை அல்ல. சில சிலீப்பர் செல்கள் என்னுடன் தொடர்பில் இருப்பதாக கதைவிட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருக்கும் 18 பேர்தான் சிலீப்பர் செல்கள்.எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள். யாராலும் இந்த ஆட்சியை தொட்டு கூட பார்க்க முடியாது என்று கர்வமாக தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.