தெற்காசியாவையே உலுக்கிய ஆழிப்பேரலையின் 13 ஆவது நினைவு தினம்!

ஆசிரியர் - Admin
தெற்காசியாவையே உலுக்கிய ஆழிப்பேரலையின் 13 ஆவது நினைவு தினம்!

தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலையான சுனாமியின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று.

தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகக் காரணமான சுனாமி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த 2004 டிச., 26 ஆம் திகதி காலை 9.25 நிமிடமளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில், 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.

இதையடுத்து எழும்பிய ஆழிப்பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், மலேஷியா, இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் ஆறாவது இடம் பிடித்தது. உயிர் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.

அதற்கு முன், 'சுனாமி' என்ற வார்த்தையை தெற்காசியாவில் யாரும் கேள்விப்பட்டதே இல்லை. கடல் அலையின் வெறும் 10 நிமிட கோபம் ஏற்படுத்திய சோகம் மக்கள் மனதில் இருந்து என்றுமே அழியப்போவதில்லை.

சுனாமி என அழைக்கப்படும் பேரலை தாக்குதலில் தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவில் 2,26,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கையின் பல பாகங்களிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.