யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிக்க மாணவர்களுக்கு தடை; நிர்வாகம் அதிரடி!

ஆசிரியர் - Admin
யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிக்க மாணவர்களுக்கு தடை; நிர்வாகம் அதிரடி!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”யாழ்ப்பாண பல்கலைக்கழக முதன்மை வளாகத்துக்குள் தற்போது தோன்றியுள்ள அசாதார நிலமை தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை துணைவேந்தருடன் அனைத்துப் பீடாதிபதிகளும் கூடி ஆராய்ந்தனர். அதன்படி கலைப்பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இடைநிறுத்தப்படுவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் எல்லா மாணவர்களுக்கும் உட்புகுவதற்கு தடை விதிக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்படுகின்றது. விடுதியில் தங்கியுள்ள மேற்படி பீட மாணவர்கள் 01.11.2017 பிற்பகல் 4.00மனிக்கு முன்பதாக விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலையை வலியுறுத்து தொடர் போராட்டங்கள் முன்னெடுத்துவந்த யாழ் பல்களைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தின் கதவுகளை அடைத்து போராட்டத்தினை ஆரம்பித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் இந்த திடீர் அறிவிப்பினால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளதாக தெரியவருகிறது.