மக்களை பாதிக்கும் வகையில் அரசியல் அமைப்பு உருவாகாது ; பிதமர் கருத்து

ஆசிரியர் - Admin
மக்களை பாதிக்கும் வகையில் அரசியல் அமைப்பு உருவாகாது ; பிதமர் கருத்து

நாட்டை பிளவுப்படுத்தல் அல்லது மக்களின் மொழி உரிமை மத உரிமை ஏனையவை பாதிக்கும் அளவில் அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் ஆணைக்கமைவாகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2864 காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கும்நிகழ்வு நேற்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2015ம் ஆண்டு முதல் இரண்டு பிரதான கட்சிகள் நல்லாட்சியை கொண்டு செல்வதற்கு தகுந்த ஜனாதிபதி ஒருவரை நியமித்ததன் ஊடாக நாம் மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பொது மக்கள் வழங்கிய வரத்தினை கொண்டு மக்களின் உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காத நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது அவசியமான தேவையாகவும், நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், திஸ்ஸ வித்தான போன்றோர் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலப்பகுதியில் 13 ஆம் திருத்த சட்டத்திற்கு அப்பால் அரசியலமைப்பை சீர் செய்ய முயற்சி செய்த போதிலும் அது முடியாதிருந்தது.

அன்று மொழி பிரச்சினை இருந்ததால் தனிநாடு பிரச்சினை உருவாகியது. இதனால் 30 வருட யுத்தத்திற்கும் நாம் முகம்கொடுத்தோம். பல துன்பகரமான நிகழ்வுகளிலிருந்து தற்பொழுது மீண்டுள்ளோம்.

புதிய அரசியல் யாப்பு ஊடாக இந்த நாட்டில் ஒருமித்த மக்களாக மட்டுமன்றி உரிமை பெற்ற மக்களாக அணைவரையும் வழிநடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் முதல் முதலாக ஒன்றிணைந்து அரசியல் யாப்பை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றனர்.

அடி மட்டத்திலிருந்து ஆராய்ந்து ஒருமித்த கட்டமைப்பை உருவாக்கி மக்களின் சமாதான வாழ்க்கைக்கு வித்திடுவதை இலக்காக கொண்டு அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படும் செயலை நாம் முன்னிறுத்தி வருகின்றோம் என அவர் குறிப்பிட்டார்