20 பெண்களை பலாத்காரம் செய்து கொலை: கொலையாளியின் தூக்கு தண்டனை ரத்து

ஆசிரியர் - Admin
20 பெண்களை பலாத்காரம் செய்து கொலை: கொலையாளியின் தூக்கு தண்டனை ரத்து

திருமணம் செய்துகொள்வதாக கூறி 20 பெண்களை பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொன்ற மோகன்குமாருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை கர்நாடக ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மோகன் குமார் (53). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு 2009-ம் ஆண்டு பண்டுவலாவை சேர்ந்த அனிதா (22) என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி, பலாத்காரம் செய்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரை எனக் கூறி அவருக்கு சயனைடு மாத்திரையை கொடுத்து கொன்றுள்ளார்.

இது தொடர்பாக தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, இதே மாதிரி மங்களூரு பஸ் நிலையத்தில் 2008-ல் ஹேமாவதி என்பவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் கர்நாடகாவில் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட பெண்களின் வழக்குகளை தனிப்படை போலீஸார் ஆராய்ந்தபோது. 2003-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரை கடலோர கர்நாடகாவில் மட்டும் 20 பெண்கள் சயனைடு கொடுத்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் மோகன் குமாரை கைது செய்து விசாரித்தபோது 2003-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை 20 பெண்களை பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்ற வழக்கை மங்களூரு விரைவு நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2013-ம் ஆண்டு நீதிபதி பி.கே.நாயக், அனிதாவை கொன்ற வழக்கில் மோகன்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கினார்.
அனிதா வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மோகன் குமார் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ரவி மாலித், ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஆகியோர் அமர்வு, “அரசு தரப்பில் போதிய சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாததால் மோகன் குமாருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் அவரை சிறையில் அடைக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.