முற்றாக ஸ்தம்பிதமடைந்த வடக்கு

ஆசிரியர் - Admin

அநுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பிரதேசங்கள் முழுவதிலும் முழு கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் முழு கடையடைப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை மாற்றக் கூடாது எனக் கோரியும் வட மாகாணம் முழுவதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை , யாழ்ப்பாணபல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ,இலங்கை ஆசிரியர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, வடமாகாண புதிய அதிபர் சங்கம்,யாழ்ப்பாண பல்கலைக்கழ ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞாக ஆய்வு மையம், கிராமி உழைப்பாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு,

தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு, யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ்ர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

இதற்கமைய யாழ்ப்பாணத்தின் நரக மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்ட நிலையில் யாழ் நகரம் களையிழந்து காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லையென தெரிவிக்கும் அவர், பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாத்திரமே வருகை தந்துள்ளதாகவும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் வீதிகள் சன நடமாட்டம் இன்றி வெறிச்சோ காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சியில் வழமை போன்று மக்கள் நடமாட்டம் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் அரச பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் 90 வீதமான வர்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் நிகழ்வுகள் இடம்பெறும் பாடசாலைகள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவை மூடப்பட்டுள்ளதுடன் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லையெனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் வவுனியாவிலிருந்து வடக்கிற்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாததுடன், வர்தக நிலையங்கள் மூடப்பட்டு முழுமையாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக எமது வவுனியா செய்தியாளர் தெரிவித்தார்.

வீதிகளில் மக்கள் நடமாட்டம் அற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் பூரண ஹர்த்தால் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.