நடைமுறையில் உள்ள மின் தடைக் காரணமாக  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பகலில் மூன்று மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின் தடை அமுலில் உள்ளது. இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்த மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் உள்ளமையால் மின் தடை ஏற்படும் போது சிகிச்சை வழங்களில் பெரும் சாவல்களை வைத்தியர்கள் எதிர் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நேற்றைய தினம் 14 நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு 5 நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட  நிலையில் மின் தடைபட்டமையால் தொடர்ந்து ஏனைய நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாது  09 நோயாளர்களும் விடுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதேவேளை தகரம் வெட்டி படுகாயமடைந்த நிலையில் சிறுவன் ஒருவன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட போதும் , மின் தடை காரணமாக சிறுவனுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலைமை காணப்பட்டமையால் , சிறுவன் அம்புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அத்துடன் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மின் தடை நேரத்தில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனார்.

எனவே வைத்தியசாலையில் உள்ள மின் பிறப்பாக்கியை விரைந்து பழுது பார்த்து மின் விநியோகத்தை சீர் படுத்துமாறு நோயாளர்கள் கோரியுள்ளனர்.

895total visits,8visits today